மல்யுத்த வீரர்களின் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது உரிய விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்பட வேண்டும் :சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி

மல்யுத்த வீரர்களின் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது உரிய விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்பட வேண்டும் :சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி
மல்யுத்த வீரர்களின் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது உரிய விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்பட வேண்டும் :சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி

மல்யுத்த வீரர்கள் புகார் மீது விரைந்து விசாரணை நடத்தி பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வலியுறுத்தி உள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியுமான பிரஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒரு மாதத்திற்கும் மேலாக போராடியும் பலன் அளிக்காததால் புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நாளில், அந்த கட்டிடம் நோக்கி பேரணி சென்றனர். அப்போது மல்யுத்த வீரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு போலீசாரால் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதன் பின்னர் 2016 மற்றும் 2021ம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் தங்கள் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசுவதற்கான ஹரித்வாரில் திரண்டனர். அப்போது அங்கு வந்த விவசாயிகள் சங்கத்தினர் மல்யுத்த வீரர்களை சமாதானம் செய்து பதக்கங்களை பெற்றுக் கொண்டனர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சர்வதேச மல்யுத்த சம்மேளனம் இது குறித்து தமது கவலையையும் அக்கறையையும் வெளிபடுத்தியது. இந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் மல்யுத்த வீரர்கள் காவல்துறையால் மிகவும் மோசமான முறையில் நடத்தப்பட்டது கவலை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டுகள் மீது உரிய விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வலியுறுத்தி உள்ளது. இதனிடையே மல்யுத்த வீரர்களின் விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பெரிய போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து விவசாயிகள் சங்கம் இன்று ஆலோசனை நடத்துகிறது.