'பதவி விலகுகிறேன்' - ராஜினாமாவை அறிவித்த நியூசிலாந்து பிரதமர்.. ஷாக்கில் மக்கள்!
'பதவி விலகுகிறேன்' - ராஜினாமாவை அறிவித்த நியூசிலாந்து பிரதமர்.. ஷாக்கில் மக்கள்!
நியூசிலாந்து நாட்டில் தொழிலாளர் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்த கட்சியின் சார்பாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டவர் ஜெசிந்தா ஆர்டென். சுமார் 3 ஆண்டுகள் கூட்டணி ஆட்சி நடைபெற்ற நிலையில், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஜெசிந்தாவின் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டு ஆட்சி அமைத்தது. இந்நிலையில், இந்த 3 ஆண்டுகால ஆட்சி முடியும் தருவாயில் உள்ளது.எனவே, நியூசிலாந்தில் அடுத்த பொதுத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.இதற்கு முன்னதாக தனது பதவியை பிரதமர் ஜெசிந்தா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.தொழிலாளர் கட்சி உறுப்பினர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் இந்த அறிவிப்பை ஜெசிந்தா வெளியிட்டார்.
பிப்ரவரி 7ஆம் தேதியுடன் பிரதமர் பொறுப்பில் இருந்து தான் விலகுவதாகவும், அடுத்த தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை எனவும் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.அடுத்த தலைவரை கட்சி தேர்வு செய்ய வேண்டும் எனவும், அடுத்த தேர்தலிலும் தொழிலாளர் கட்சியே வெற்றி பெறும் எனவும் ஜெசிந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார். "நாட்டை வழிநடத்துவது மிகவும் பெருமைக்குரிய பணியாகும். அதேவேளை சவால் நிறைந்த ஒன்று. முழுமையான ஆற்றல் இருந்தால் மட்டுமே இந்த பணியை செய்ய முடியும், 6 ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ள நிலையில் இனிமேல் முழு ஆற்றலுடன் செயலாற்றுவேன் என்று தோன்றவில்லை. எனவே பதவி விலகுகிறேன்" எனக் கூறியுள்ளார்.
37 வயதிலேயே பிரதமர் பொறுப்பை ஏற்ற ஜெந்தா அந்நாட்டின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையை கொண்டவர். இவர் தனது ஆட்சி காலத்தில் கோவிட்-19 பெருந்தொற்று, கிறிஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதல்,வைட் தீவு எரிமலை வெடிப்பு போன்ற சவாலான சூழல்களை எதிர்கொண்டார்.
அதேபோல், நாட்டின் தலைமை பதவி வகிக்கும் போதே குழந்தை பெற்றுக்கொண்ட இரண்டாவது பெண் என்ற தனித்துவமான பெருமையும் ஜெசிந்தாவுக்கு உண்டு.ஜெசிந்தா பதவி விலகியுள்ள நிலையில் இடைக்கால தலைவரை அக்கட்சி தேர்வு செய்யவுள்ளது. நியூசிலாந்தின் பொதுத்தேர்தல் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.