ராஜஸ்தான் தலைமை செயலக கட்டிடத்தில் ரூ.2.31 கோடி ரொக்கப்பணம் 1 கிலோ தங்கம் சிக்கியது: கட்டுக்கட்டாக மீட்கப்பட்ட ரூ.2 ஆயிரம் நோட்டுகள்; 7 ஊழியர்கள் கைது
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அரசு அலுவலகத்தின் அடித்தளத்தில் இருந்து ரூ.2.31 கோடி ரொக்கம் மற்றும் 1கிலோ தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 7 அரசு ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யோஜனா பவன் என்ற பெயரில் அரசு தலைமை செயலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் ரொக்கம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அசோக்நகர் காவல்நிலையத்துக்கு புகார் வந்தது. புகாரின்பேரில் போலீசார் மற்றும் உயரதிகாரிகள் விரைந்தனர். அங்கு பூட்டியிருந்த அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த சூட்கேசை உடைத்து பார்த்தனர்.
அதில் ரூ.2000, ரூ.500 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் 1 கிலோ மதிப்புள்ள தங்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் மாலை ரூ.2000 நோட்டுக்கள திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் ரூ.2000 நோட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் அசோக் கெலாட், தலைமை செயலாளர் உஷா சர்மா, டிஜிபி உமேஷ் மிஸ்ரா, ஏடிஜிபி தினேஷ், ஜெய்ப்பூர் ஆணையர் ஆனந்த் வஸ்த்சவா உள்ளிட்டோர் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ஆணையர் ஸ்ரீவஸ்த்சவா கூறுகையில், ‘‘அலமாரியில் இருந்த சூட்கேசில் இருந்து ரொக்கமும் மற்றொரு பெட்டியில் தங்கமும் இருந்தது. இந்த அலமாரிகள் பல மாதங்களாக பூட்டப்பட்டு இருந்தது. மேலும் சில கோப்புக்கள் இருந்தன. இது யாருடைய பணம், இங்கு எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக 7 ஊழியர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார். இது குறித்து பாஜ எதிர்கட்சி தலைவர் ராஜேந்திர ரத்தோர் டிவிட்டர் பதிவில், ‘‘ராஜஸ்தான் முதல்வர் கெலாட் அமர்ந்து அரசை நடத்தி வரும் தலைமை செயலகத்தில் இருந்து ரொக்கம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கெலாட் அரசின் ஊழலை பிரதிபலிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.