தமிழகத்தில் கனமழை: 9 மாவட்ட பள்ளிக்கு விடுமுறை
சென்னை : வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்திருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருப்பதாலும், கிழக்கு திசை காற்றின் காரணமாகவும், கடலோர மாவட்டங்களை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் வடபழனி, கிண்டி, மயிலாப்பூர், ஈக்காட்டுதாங்கல், கொளத்தூர், வேளச்சேரி, கே.கே.நகர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.,30) விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.




